12 Aug 2008

சுதந்திர தினம்

இன்னும் சில நாட்களில் வருகிறது இன்னொரு சுதந்திர தினம். அதை முன்னிட்டு இதோ என்னுடைய கவிதை ஒன்று.

ஆகஸ்டு பதினைந்தும் சுதந்திரமும்

காற்றில் ஆடும் தேசியகொடிகள்
காதைக் கிழிக்கும் மேடைப் பேச்சுகள்
அரசியல் சுதந்திரத்தின் ஆரவாரங்கள்
ஆகஸ்டு 15ன் மாயத் தோற்றங்கள்

வருடந்தோறும் விடாமல் நடக்கும்
பக்தி சடங்குகள் தேச சம்பிரதாயங்கள்
தேவை இல்லை இந்த சுதந்திரம்
எனக்கு வேண்டும் உண்மை சுதந்திரம்


வெயில் அடிக்கும் பகல் நேரத்தில் - என்
வீட்டு வாசல் வேப்ப நிழலில்
காலை நீட்டி தூங்க முடிந்தால் - ஆஹா
கிடைத்தது சுதந்திரம் !
கிடைத்தது சுதந்திரம் !

நெருஞ்சி முட்களை ஒதுக்கி விட்டு - என்
குருஞ்சிப் பூக்களை விருந்துக்கு அழைத்து
மலர்களுடன் மயங்கியே கிடந்தால் - அன்று
மனதுக்கு கிடைத்தது மகிழ்ச்சி சுதந்திரம்

கொட்டும் மழையில் சிரிக்கும் நதியில்
பொட்டல் காட்டில் எரிக்கும் வெயிலில்
ஆயிரக்கணக்கில் ஆட்கள் நெரிக்கும்
அரசியல் கூட்டம் சந்தை திருவிழாவில்

முகமும், முகவரியும் இல்லாத உருவமாய்
தனியாய், காற்றாய், நிழலாய், அருவமாய்
இருந்தும் இல்லாமல் இருக்க முடிந்தால்
இனிப்பாய் இனிக்கும் இன்பச் சுதந்திரம்

ரகசிய சந்தோஷங்களை
ரணங்களை, ஆசைகளை
பயத்தையும், கூடவே என்
பொறாமையையும் சொல்ல ஒரு
தோழி - குறைந்த பட்சம் ஒரு தோழனாவது -
கூட இருந்தால் பாக்கியம். அது சுதந்திரம்.

என்ன தான் இருந்தாலும்
பிடித்தவளிடம் பல் இளிக்கவும்
பிடிக்காதவனிடம் முகஞ்சுளிக்கவும்
முடிந்தால் போதும்
அதுவே சுதந்திரம் !

---
பின்குறிப்பு

கொடிக்கு அல்ல, ஆசிரியர்களுக்கு மட்டும் மரியாதை கொடுத்து வெயிலில் நின்று, பின் கொடுத்த மிட்டாயை வாங்கி சாப்பிட்டு விட்டாலும், எல்லோரும் போன பின்பு இப்படி விளையாட முடிந்தால் அது தான் உண்மையில் சுதந்திரம்.

கொடிக்கு அவ மரியாதை என்று யாராவது இந்த குழந்தைகளின் மீது நடவடிக்கை எடுத்து விடுவார்களோ ?

6 Apr 2008

வியத்தலும் இலமே ...

மகாராஜாவின் ரயில் வண்டி சிறுகதைத் தொகுப்பைப் படித்ததிலிருந்தே அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துகளைப் படிக்க வேண்டும் என்றொரு ஆவல் தொடர்ந்து இருந்து வந்தது. அப்போது தான் காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து இந்த "வியத்தலும் இலமே" என்ற புத்தகம் வந்திருப்பதை அறிந்து வாங்கினோம்.இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் பல நாடுகளில் பணிபுரிந்து விட்டு இப்போது கனடாவில் ஓய்விலிருக்கிறார்.

“உங்களுக்கு ஆங்கில எழுத்தாளர்களைச் சந்திப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. நீங்கள் அவர்களைப் பற்றி எழுதலாமே.” என்று சுந்தர ராமசாமி சொன்னதை அடுத்து இப்படி பல ஆங்கில எழுத்தாளர்களைச் சந்தித்து எழுதிய நேர்காணல்கள் தான் இப்புத்தகத்தில். வித்தியாசப்பட்ட பல எழுத்தாளர்களைச் சந்தித்து (“எழுத்தாளர்கள் என்றாலே வித்தியாசப்பட்டவர்கள் தானே !”) அவர்களைப் பற்றி வியந்து வியந்து இவற்றை எழுதியுள்ளார்.

முன்னுரையில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதியது போல,

“இவர் நேர்கண்டவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள். இவர்கள் தனிப்பிறவிகள். அதுவும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கண்ணாடியால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள். கவனம் சற்றுக் குறைந்தால் அவர்களும் உடைந்து அவர்களைக் கையாள்பவர்கள் கைகளிலும் இரத்தம் வரவழைத்துவிடுவார்கள். அவர்களிடம் குத்துச் சண்டை நடத்து முடியாது. மிகக் கவனமாக அவர்களைக் கையாண்டிருப்பது ஒரு சாதனை தான். எளிதில் அகப்படாதவர்களை புகழ்பெற்றவர்களை ஆனால் தமிழருக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர்களை நேர்காணல்கள் செய்திருப்பது அதிசயத்திலும் அதிசயம்.”
பலதரப்பட்டவர்கள். இவர் செவ்வி கண்டவர்களில் அதிகம் ஆச்சரியப்பட வைத்தவர் அகில் சர்மா தானாம். மில்லியன் டொலர் சம்பளம் கிடைக்கும் நிரந்தரமான வேலையைத் துறந்துவிட்டு முழுநேர எழுத்து வேலைக்கு வந்தவர்.
“ 'வேலையிலிருந்து விலகிவிட்டீர்களா ?' என்று திரும்பத் திரும்பக் கேட்டேன். அவர் 'ஆம், ஆம்' என்று பதிலளித்தார். ஓர் எழுத்தாளர் அப்படி முடிவெடுப்பதற்கு அவருக்கு எவ்வளவு அர்ப்பணிப்பு இருந்திருக்க வேண்டும் !”
டேவிட் ஓவன் என்பவரிடம் இருந்து தான் நியூ யோர்க்கர் போன்று பெரும் பத்திரிக்கைகளில் இலக்கணத்துக்கு என்று தனியாக ஓர் எடிட்டர் இருக்கும் விஷயத்தைத் தெரிந்து கொண்டாராம்.
“ஓர் இலக்கண எடிட்டர் மூன்று சொல் வாக்கியத்தில் நாலு பிழை கண்டு பிடிப்பார் என்று சொல்லி டேவிட் ஓவன் என்னை அதிசயிக்க வைத்தார் !”
இந்த மிகப் புகழ்பெற்றவர்களின் எளிமை தன்னை மிகவும் வியக்க வைத்ததாக பல இடங்களில் எழுதியுள்ளார். உதாரணமாக,
“டேவிட் செடாரிஸ் மேடையில் தோன்ற 25000 டொலர் சன்மானம் வழங்குவார்கள். செவ்வி முடிந்து நான் புறப்பட்ட போது அவரே வாசல் வரை வந்து வழியனுப்பியவர், என் பையை அவரே தூக்கிவிட்டார். அதை நான் பறிக்க வேண்டி வந்தது.

மொகமட் நஸீகு அலி என்பவர் இளைஞர். அவருடைய முதல் கதை நியூ யோர்க்கரில் பிரசுரமாகியிருந்தது. எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று கேட்டேன். '5200 டொலர். என்னால் நம்பவே முடியவில்லை' என்று சொல்லிவிட்டு வாயைக் கைகளால் பொத்திக் கொண்டு சிரித்தார். அவருக்கு வெட்கம் வந்துவிட்டது.”
இன்னேர் அதிசயம் இந்தப் பிரபலர்கள் அனுபவித்த வறுமை. ஓஸ்கார் பரிசு பெற்ற இயக்குநர் பிரிஸ்கி அகெடமி விழாவுக்கு ஒரு ஆடம்பரமான ஆடையை வாடகைக்கு எடுத்து உடுத்தி வந்திருந்தாராம். “நான் ஒரு நாள் சிண்ட்ரல்லா" என்று சொன்னாராம். புலிட்சர் பரிசு பெற்ற ஃபிராங்க் மக்கோர்ட் சிறிய வயதில் கீழ்வீட்டிலிருந்து திருடிய மின்சாரத்தில் கம்பளியைச் சூடாக்கி அதற்குள் சுருண்டு படுத்துக் கொள்வாராம்.

சில அருமையான விஷயங்கள் இங்குமங்கும் சிதறிக் கிடக்கின்றன இந்தச் செவ்விகளில். வார்ரென் கரியோ என்பவர் கனடாவில் எழுத்தாளர்களைக் கவுரவிக்கும் கில்லெர் பரிசுத் தெரிவுக் குழுவில் நடுவராக பணியாற்றியவர்.
“அவரிடம் இரண்டு நல்ல புத்தகங்களில் ஒன்றை மட்டும் எப்படித் தெரிவு செய்வார் என்று கேட்டபோது நுட்பமான ஒரு விசயத்தைச் சொன்னார். 'திரும்பத் திரும்பப் படிக்கும் போது ஒன்றிலே ஒளி கூடும். இன்னொன்றிலோ குறையும். ஒளி கூடியதையே நான் தெரிவு செய்கிறேன்' என்றார்.”
மிக நல்ல இந்த புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். பரிந்துரைக்கிறேன்.

29 Mar 2008

கைத்தல நிறைகனி...

- பாலா

காரியம் துவங்கும் முன், கணபதியை வழிபடல் ஒரு மரபு. நீண்ட காலம் கழித்து எழுதத் துவங்கும் எனக்கு, புதுமைப்பித்தனில் இருந்து துவங்க ஆசை. "இங்கே இருந்துதான், புதிய தமிழ் இலக்கியம், வீறுடன் பிறந்த மேனியோடு நாபிக்கொடியை இழுத்துத் தோள் மீது போட்டுக்கொண்டு சமூகத்தின் மீது கசையடி கொடுக்கும் போரினைத் தொடங்குகிறது.

காவியத்துக்கு ஒரு கம்பன். கவிதைக்கு ஒரு பாரதி எனின், சிறுகதைக்கு ஒரு புதுமைப்பித்தன் என்று தமிழ் இலக்கிய சாம்ராஜ்யத்தில் பறை கொட்டிச் சொல்லுகின்ற படைப்புகளின் தொகுதி" இது, ஜெயகாந்தன் புதுமைப்பித்தனைப் பற்றிக் கூறுவது.

புதுமைப்பித்தன் எனக்கு நிலவைப் போல. தொலைவில் இருந்து பார்த்து ரசிக்கும் ஒரு சிறுவனைப் போலவே நான் உணர்கிறேன். அப்படி ஒரு ஆனந்தம் அவர் கதைகளைப் படிக்கும் போது.



கதைகளில் அவர் நடை, ஒரு தேர்ந்த வேட்டை நாயின் பாய்ச்சல் (நன்றி: ஜே ஜே சில குறிப்புகள்) போல தாவித் தாவிச் செல்கிறது. அவற்றில் சில சமயம் தோன்றும் உள்ளொளிள் பரவசமூட்டுபவை.

இன்றைக்கு, "கடவுளும், கந்தசாமிப் பிள்ளையும்" பற்றி எழுத ஆசை. கடவுள் ஒரு நாள், கந்தசாமிப்பிள்ளையைக் காண நேரில் வருகிறார். கந்தசாமிப்பிள்ளை எப்படிப் பட்ட ஆள்??

"மேலகரம் இராமசாமிப் பிள்ளைக்கு 45 வயசு. 45 வருடங்களாக அன்ன ஆகாரமில்லாமல் வளர்ந்தவர் போன்ற தேகக்கட்டு". கடந்த 15 வருடங்களாக இந்த வரிகளை நினைத்துச் சிரித்து கொண்டிருக்கிறேன்.

கந்தசாமிப்பிள்ளை, கடவுளை, காபி சாப்பிட அழைக்கிறார். பில்லை கடவுள் தலையில் கட்டிவிட பிளான். ஹோட்டலில், ஆர்டர் செய்கிறார் பிள்ளை.

"சூடா, ஸ்டிராங்கா, 2 கப் காப்பி" இது பிள்ளை.

"தமிழை மறந்துவிடாதே, 2 கப் காப்பிகள் என்று சொல்" என்கிறார் கடவுள்.

"அப்படி அல்ல, இரண்டு கப்கள் காப்பி" என்று பிள்ளை திருத்த, முறியடிக்கப் பட்ட கடவுள் பரிதாபமாக விழிக்கிறார்.

எனக்கு இது, creative license கொண்டு, பு.பி உருவாக்கிய ஒரு மாபெரும் புனைவாகத் தோன்றுகிறது. படைப்பு விதிகளைத் தாண்டிய கடவுளின் நர்த்தனம் போன்று.

இருவரும் காப்பி பருகி விட்டு, பிள்ளையின் வீட்டுக்குச் செல்கிறார்கள். கடவுள் கேட்கிறார்,

"நீர் என்ன செய்கிறீர்?" - பிள்ளை, தான் 17 வருடங்களாக ஒரு பத்திரிகை நடத்துவதாகச் சொல்கிறார். கடவுள் நடுநடுங்கிப் போகிறார். பதினேழு பனிரண்டு, 144 இதழ்களா என்று..

ஒரு வேளை காலாண்டுப் பத்திரிகையாக இருக்கலாம் என்ற அற்ப நம்பிக்கை கொண்டு மனதைத் தேற்றிக்கொள்ள முயல்கிறார்.

இது நகைச்சுவையின் உச்ச கட்டம் என்று சொல்லலாம். சித்த வைத்திய தீபிகை என்ற பத்திரிகை நடத்துவதாக் காலட்சேபம் நடத்து பிள்ளையின் வாழ்க்கையில், கடவுள் ஒரு சில நாட்கள் வருகிறார். பிள்ளை அவரிடம் இருந்து கேட்பது அவர் பத்திரிகைக்கு சந்தா.

பிள்ளைக்கு, கடவுளின் தேவை அவ்வளவே. கடவுள் பூமியில் ஏதாவது தொழில் செய்யலாம் என்று பிள்ளையின் உதவியை நாடி, தோல்வியுற்று ஓடி விடுகிறார்.

கதையெங்கும், பிள்ளை, கடவுளை, one-on-one கையாள்வது மிக புதிய யுக்தி. புதுமைப்பித்தனின் வரிகள் வாழ்க்கையின் எல்லா நோக்கங்களையும் எள்ளி நகையாடுகிறது.

நகைச்சுவையால், வறுமையைத் தின்று செரிக்கிறார். வறுமையை எண்ணி ஒரு வருத்தமோ, தாழ்மையுணர்வோ கொஞ்சம் கூட இல்லை. மாறாக, அதையே கவசமாகக் கொண்டு வாழ்க்கையை விளையாடுகிறார் பிள்ளை. எத்தனை முறை படித்தாலும் சலிக்காமல்,

மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருக்கிறேன்.

வாழ்க்கையின் மீது காதல் கொள்ள வைக்கும் கதை.

7 Mar 2008

எழுத்தாளர் சுஜாதா மறைந்தார் ...

என்னுடைய விருப்பமான எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா போன வாரம் மறைந்தார். வானத்தின் கீழேயுள்ள எல்லா விஷயங்களை மட்டுமல்ல வானத்துக்கு வெளியே உள்ள பலவற்றைப் பற்றியும் எழுதியுள்ளார் சுஜாதா. கடந்த சில வருடங்களாக அவர் ஆனந்த விகடனில் எழுதி வந்த கற்றதும் பெற்றதும் மிகவும் பாராட்டைப் பெற்ற ஒரு தொடர்.



ஆனால் 60 மற்றும் 70களில் வந்த அவரது சிறுகதைகளைத் தான் நான் மிகவும் விரும்புகிறேன். அதிலும் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் அவரது அங்கத நடைக்கும் உலகத்தில் நடக்கும் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கும் தன்மைக்கும் நல்ல உதாரணம். அவரது கட்டுரைகள் முக்கியமாக சிறீரங்கத்தில் சின்னப் பையனாக இருந்த போது சைக்கிள் கற்றுக் கொண்ட விதமும் முதன் முதலில் விமானம் ஓட்டியதைப் பற்றி எழுதியதும் எழுத்தாளர் சுஜாதாவை விமர்சகர் எஸ்.ஆர்.ராஜன் சந்திப்பது போல் (இரண்டுமே அவர் தான்) எழுதிய கட்டுரை இவையெல்லாம் மிகவும் அருமையானவை.

இன்றைய இளைஞர்களுக்கும் பிடிக்கும் வகையில் பொருந்தும் வகையில் எழுத முடிந்தது அவரது முக்கிய சாதனை என்று நினைக்கிறேன். விஞ்ஞானம் மற்றும் கணிப்பொறி பற்றி நம்முடைய வாரந்திர பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் சுஜாதா எனலாம். மின்னணு வாக்கு இயந்திரத்தைத் தயாரித்த விஞ்ஞானிகளின் குழுவில் ஒருவராய் இருந்த சுஜாதா முதலில் ஒரு எழுத்தாளர் அதன் பின் தான் விஞ்ஞானி.



இந்த இயந்திரத்தைப் பல வருடங்களுக்கு முன்பு முதன் முதலாக கேரளாவில் சோதனை செய்து பார்த்த போது அது பற்றி எழுதிய கட்டுரை இதற்கு நல்ல ஒரு உதாரணம். வரிசை வரிசையாக மலையாளிகள் இந்த இயந்திரத்தைப் பார்க்க வந்ததும் இந்த இயத்திரத்தை தீவிரமாக எதிர்த்த மார்க்ஸிஸ்ட் கட்சித் தலைவரே கடைசியில் தேர்தலில் ஜெயித்த உடன் கண்ணில் நீர் மல்க நன்றி சொன்னதும் இந்த இயந்திரத்தைப் பார்க்க ஒரு கன்னியாஸ்திரீ ஓடி வந்ததையும் மிக அழகாய் பதிவு செய்தவர் சுஜாதா.

திருக்குறளுக்கு அவர் எழுதிய உரை நவீன சுருக்கம். அவர் விட்டுச் சென்ற காலியிடம் நிரப்பப் படுவது கஷ்டம் தான்.

15 Feb 2008

அந்தக இரவில் கந்தக வடை

வைரமுத்துவின் ஆரவார அலங்கார நடை, மிகையான அடைமொழிகள், பொருளற்ற முரண் தொடர்கள், வேண்டாத வடமொழிச் சொற்கள் முதலானவற்றைப் பகடி செய்யும் காக்கை-நரி வடை கதை இதோ :
புழுதி படிந்த ஒரு கிராமத்தில் யெளவனக் கிழவி ஒருத்தி வடை சுட்டு விற்று வந்தாள். காசு பெற்று வந்தாள். அந்த மோக வடைக்காகத் தாகம்கொண்டு வந்தது ஒரு கார்மேகக் காகம். 'சில்லறை கொடுக்காமல் வடை கேட்டால் உன்னைக் கல்லறைக்கே அனுப்பி விடுவேன்' எனச் சினந்தாள் அந்தச் சிங்காரக் கிழவி. ஆனால் பாட்டி பாராத சமயம் அந்த அந்தகக் காகம் சந்தன மின்னல் போலப் பாய்ந்து அந்த கந்தக வடையைக் கவர்ந்து சென்றது.

அது ஒரு தாவணி மேகங்கள் சூழ்ந்த காடு. பொன்மாலைப் பொழுது. பச்சைப் புல்வெளி ஓரம் பன்னீர்க் குடங்களின் சாரம் ! ... ஒரு ரோஜாப் பூ ஆளான நேரம் ! அங்கே சென்றது காகம் !

விதைக்குள் இருந்து வந்த விருட்சம் அங்கே வளர்ந்து நின்றது பல வருஷம் ! அதன் கிளைகளில் சென்று அமர்ந்தது அந்த சொப்பனக் காகம் ! ...

அந்தக் கனவு வடையைத் தன் வீரிய விரல்களுக்கு இடையே வைத்து நேரிய நயனத்தால் சுற்றும்முற்றும் பார்த்து ... கூரிய அலகால் கொத்திச் சாப்பிட முயன்ற போது ...


பூவுக்குள் பூகம்பம் போல் புறப்பட்டு வந்தது ஒரு நரி ! அந்த நரி நர்த்தக நரி ! ... கார்மேகக் காகத்தைப் பார்த்து ... உடல் வியர்த்தது ! நரியின் மனதில் ஒரு வெறி வேர் விட்டது ! ... அந்த ராஜவடையை அபகரிக்க அதன் நந்தனவனத்து மூளை நாசவேலை செய்தது ! ... நரி அதுவாக காகம் அருகே மெதுவாக ... ஒரு இதுவாகச் சென்றது ! ...


'ஓ உலக அழகியே ! ... உள்ளூர் மோனலிஸாவே ! கறுப்பு முந்திரியே ! கந்தர்வ சுந்தரியே ! நீ பார்க்கவே எவ்வளவு அழகு நீ மட்டும் கானம் இசைத்தால் எருதுக்கும் விருது கிடைக்கும் ! சர்ப்பம் கூட கர்ப்பம் தரிக்குமே !' என்றது. இந்த இடத்தில் தான் சரித்திரம் சரிகிறது. பூகோளம் புரள்கிறது ! நரியின் தேவ எண்ணத்தில் ஈட்டி பாய்ந்தது ! ... கார்மேக காகம் நரியை வெறுத்தது. பாட்டை ஒறுத்தது. அது பதிலிறுத்தது ...

'நான் வைரமுத்துவின் வாசலில் வளர்ந்த காகம் ! மெட்டிருந்தால் தான் பாடுவேன் ... இல்லையேல் இல்லை !' என்று சொல்லிப் பறந்தது ... நரியின் சூது இறந்தது ...!
ஆனந்த விகடன், 3 செப்டம்பர் 1989ல் வந்ததாம்.

3 Feb 2008

மரணம்

நெருநெல் உளனொருவன் இன்றில்லையென்னும்
பெருமை படைத்தது இவ்வுலகு.

நேற்று இருந்தார்கள், ஆனால் இன்றில்லை என்பது தான் இந்த உலகமாம். இதில் பெருமை என்ன வேண்டிக் கிடக்கிறது ?

இன்று காலை தான் எங்களுடன் வேலை பார்த்து வந்த அப்பு என்ற கிட்டத்தட்ட 30 வருடமான ஒருவர் இறந்து விட்டார். நெஞ்சு வலியாம். இத்தனை நாட்கள் கல்லு மாதிரி இல்லையென்றாலும் இப்படி ஆகும் என்று எதிர்பார்க்கவே முடியாத மாதிரி தான் இருந்தார், இருந்திருந்தார்.

உலகத்தின் பெருமையை மீண்டும் நிலைநாட்டும் விதமாக இன்று காலை மருத்துவமனைக்கு வந்து சேரும் போதே மரணத்தின் வாசல் வரை போய் விட்டிருந்தார்.

உலகத்தின் பெருமையை மீண்டும் நிலைநாட்டும் விதமாக இன்று காலை மருத்துவமனைக்கு வந்து சேரும் போதே மரணத்தின் வாசல் வரை போய் விட்டிருந்தார். இப்படி அச்சு அடித்துக் கொண்டிருக்கும் நான் கீழே இருக்கும் Publish பொத்தானை அமுத்தும் வரை இருப்பேனா ?

அப்பு சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டாரா, நான் அவரிடம் சொல்ல வேண்டியதையெல்லாம் சொன்னேனா ? கொஞ்சம் கலங்கிப் போனது உண்மையென்றாலும், என்னவோ எப்போதும் இருக்கப் போவது போல் பல்வேறு திட்டங்களும், கனவுகளும், சண்டைகளும், பொறாமையும், இன்னும் மனசெல்லாம் நிறைந்து தான் இருக்கின்றன.

நல்ல விஷயத்தைச் செய்ய நல்ல நேரமெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்ற பழைய தீர்மானம் இன்னும் அழுத்தமாகத் தான் ஆக வேண்டியிருக்கிறது. உடனே செய், இங்கேயே, இப்போதே. என்னுடைய நம்பிக்கைகள், உறுதியான தீர்மானங்கள் மற்றும் விருப்பங்கள் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு, யாருக்கு என்ன வேண்டுமோ அதைக் கொஞ்சம் செய்ய முயற்சி செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.

இதெல்லாம் ஒரு வேளை இன்று தூங்கி எழுந்திருக்கும் வரை தானோ என்னவோ.

26 Jan 2008

கிணறும் தண்ணீர் லாரியும்

சுந்தர ராமசாமியின் "ஜே.ஜே. சில குறிப்புகள்" நாவலில் இருந்து.

நாட்டகம் குன்றுக்குப் போகும் வழியில் ஒரு பொதுக்கிணறு இருக்கிறது. சரித்திரத்தின் பழமையை நினைவூட்டக் கூடிய வைதீகக் கிறிஸ்துவர்களுக்கு வேதாகமத்தின் ஒரு பக்கத்தை நினைவூட்டக்கூடிய கிணறு.

இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் விடிய மூன்று மணி வரையிலும் அந்தக் கிணறு உறங்கக்கூடும். அந்நேரத்திலும் ஒரு கிழவி வந்தாலும் வருவாள். பெண்கள் குடங்கள் பெண்கள் கிழவிகள் குழந்தைகள் குடங்கள் அம்புரோஸ் ஆசான் இந்தக் கிணற்றுக்குப் பின்னால் குடியிருக்கிறார். 'பாத்திரங்களில் நீர் அமிழும் ஓசையை எழுபது வருடங்களாக இடைவிடாது கேட்டுக்கொண்டு வருகிறேன்' என்றார்.



இன்று ஒரு செய்தி காலையில். அந்தக் கிணற்று நீரில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறதாம். மயக்கம் தலைச்சுற்றல் வாந்தி தொடர்ந்து எண்ணற்ற ஹேஷ்யங்கள். எண்ணற்ற சந்தேகங்கள். வேறுபட்ட உரைகள். முன் விரோதங்கள். மதச்சண்டை. ஜாதிச் சண்டை. என்னென்னவோ.

காலையில் அங்கு போனேன். போலீஸ் வேலி. சோதனையில் நீரில் விஷம் இருப்பது நிரூபணமாகி விட்டதாம். அந்தக் கிணறு அமைதியாகச் செய்து கொண்டிருந்த காரியத்தை தண்ணீர் சப்ளை செய்யப் புறப்பட்ட முனிசிபாலிட்டி அலங்கோலமாகவும் அநாகரிகமாகவும் ஆபாசமாகவும் செய்ய முற்பட்டு தத்தளித்து மனித வாய்களில் மிக மோசமான வசைகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது.


பொதுக் கிணற்றில் விஷம் கலந்த போது ஜனங்கள் பளிச்சென்று தெரிந்து கொண்டு விட்டார்கள். குடல் காட்டிக் கொடுத்து விட்டது. உடல் எதிரியைத் தெரிந்து கொள்வது போல் மன எதிரியை இனங்கானத் தெரிவதில்லை.

20 Jan 2008

தமிழ்ப் பதிவு

2008க்கான புது வருடத் தீர்மானங்களில் ஒன்று தான் சுவடிப்பூக்கள் என்ற இந்தத் தமிழ் பதிவு. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதைக் கையால் எழுதி நண்பர்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன்.


மாதத்திற்கு ஒரு பக்கமாவது தமிழில் எழுத வேண்டும் என்பது முடிவு. ஆங்கிலத்தில் வலைப்பதிவு செய்ய ஆரம்பித்த பின் சுற்றியுள்ள நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிப்பதில் ஓர் ஆர்வம் எழுந்துள்ளது. தமிழிலும் அது தொடரும் என்று நம்புகிறேன்.



இதன் தொடர்ச்சியாக காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து தமிழ்ப் புத்தகங்களை வாங்கியதும் பொங்கல் சமயத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நல்ல சில தமிழ்ச் சிறுகதைகளை படிக்க முடிந்ததும் புத்தாண்டுத் தீர்மானங்களை நடப்பிலாக்குவதில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றன.


பார்க்கலாம்.

1 Jan 2008

முதல் தமிழ் அடி

இது என்னுடைய புதிய தமிழ் பதிவாகும்.


இனி தொடர்ந்து எழுத உத்தேசம். பார்க்கலாம். என்னால் இன்னும் தமிழில் யோசிக்க முடிகிறதா என்று.