6 Apr 2008

வியத்தலும் இலமே ...

மகாராஜாவின் ரயில் வண்டி சிறுகதைத் தொகுப்பைப் படித்ததிலிருந்தே அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துகளைப் படிக்க வேண்டும் என்றொரு ஆவல் தொடர்ந்து இருந்து வந்தது. அப்போது தான் காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து இந்த "வியத்தலும் இலமே" என்ற புத்தகம் வந்திருப்பதை அறிந்து வாங்கினோம்.இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் பல நாடுகளில் பணிபுரிந்து விட்டு இப்போது கனடாவில் ஓய்விலிருக்கிறார்.

“உங்களுக்கு ஆங்கில எழுத்தாளர்களைச் சந்திப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. நீங்கள் அவர்களைப் பற்றி எழுதலாமே.” என்று சுந்தர ராமசாமி சொன்னதை அடுத்து இப்படி பல ஆங்கில எழுத்தாளர்களைச் சந்தித்து எழுதிய நேர்காணல்கள் தான் இப்புத்தகத்தில். வித்தியாசப்பட்ட பல எழுத்தாளர்களைச் சந்தித்து (“எழுத்தாளர்கள் என்றாலே வித்தியாசப்பட்டவர்கள் தானே !”) அவர்களைப் பற்றி வியந்து வியந்து இவற்றை எழுதியுள்ளார்.

முன்னுரையில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதியது போல,

“இவர் நேர்கண்டவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள். இவர்கள் தனிப்பிறவிகள். அதுவும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கண்ணாடியால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள். கவனம் சற்றுக் குறைந்தால் அவர்களும் உடைந்து அவர்களைக் கையாள்பவர்கள் கைகளிலும் இரத்தம் வரவழைத்துவிடுவார்கள். அவர்களிடம் குத்துச் சண்டை நடத்து முடியாது. மிகக் கவனமாக அவர்களைக் கையாண்டிருப்பது ஒரு சாதனை தான். எளிதில் அகப்படாதவர்களை புகழ்பெற்றவர்களை ஆனால் தமிழருக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர்களை நேர்காணல்கள் செய்திருப்பது அதிசயத்திலும் அதிசயம்.”
பலதரப்பட்டவர்கள். இவர் செவ்வி கண்டவர்களில் அதிகம் ஆச்சரியப்பட வைத்தவர் அகில் சர்மா தானாம். மில்லியன் டொலர் சம்பளம் கிடைக்கும் நிரந்தரமான வேலையைத் துறந்துவிட்டு முழுநேர எழுத்து வேலைக்கு வந்தவர்.
“ 'வேலையிலிருந்து விலகிவிட்டீர்களா ?' என்று திரும்பத் திரும்பக் கேட்டேன். அவர் 'ஆம், ஆம்' என்று பதிலளித்தார். ஓர் எழுத்தாளர் அப்படி முடிவெடுப்பதற்கு அவருக்கு எவ்வளவு அர்ப்பணிப்பு இருந்திருக்க வேண்டும் !”
டேவிட் ஓவன் என்பவரிடம் இருந்து தான் நியூ யோர்க்கர் போன்று பெரும் பத்திரிக்கைகளில் இலக்கணத்துக்கு என்று தனியாக ஓர் எடிட்டர் இருக்கும் விஷயத்தைத் தெரிந்து கொண்டாராம்.
“ஓர் இலக்கண எடிட்டர் மூன்று சொல் வாக்கியத்தில் நாலு பிழை கண்டு பிடிப்பார் என்று சொல்லி டேவிட் ஓவன் என்னை அதிசயிக்க வைத்தார் !”
இந்த மிகப் புகழ்பெற்றவர்களின் எளிமை தன்னை மிகவும் வியக்க வைத்ததாக பல இடங்களில் எழுதியுள்ளார். உதாரணமாக,
“டேவிட் செடாரிஸ் மேடையில் தோன்ற 25000 டொலர் சன்மானம் வழங்குவார்கள். செவ்வி முடிந்து நான் புறப்பட்ட போது அவரே வாசல் வரை வந்து வழியனுப்பியவர், என் பையை அவரே தூக்கிவிட்டார். அதை நான் பறிக்க வேண்டி வந்தது.

மொகமட் நஸீகு அலி என்பவர் இளைஞர். அவருடைய முதல் கதை நியூ யோர்க்கரில் பிரசுரமாகியிருந்தது. எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று கேட்டேன். '5200 டொலர். என்னால் நம்பவே முடியவில்லை' என்று சொல்லிவிட்டு வாயைக் கைகளால் பொத்திக் கொண்டு சிரித்தார். அவருக்கு வெட்கம் வந்துவிட்டது.”
இன்னேர் அதிசயம் இந்தப் பிரபலர்கள் அனுபவித்த வறுமை. ஓஸ்கார் பரிசு பெற்ற இயக்குநர் பிரிஸ்கி அகெடமி விழாவுக்கு ஒரு ஆடம்பரமான ஆடையை வாடகைக்கு எடுத்து உடுத்தி வந்திருந்தாராம். “நான் ஒரு நாள் சிண்ட்ரல்லா" என்று சொன்னாராம். புலிட்சர் பரிசு பெற்ற ஃபிராங்க் மக்கோர்ட் சிறிய வயதில் கீழ்வீட்டிலிருந்து திருடிய மின்சாரத்தில் கம்பளியைச் சூடாக்கி அதற்குள் சுருண்டு படுத்துக் கொள்வாராம்.

சில அருமையான விஷயங்கள் இங்குமங்கும் சிதறிக் கிடக்கின்றன இந்தச் செவ்விகளில். வார்ரென் கரியோ என்பவர் கனடாவில் எழுத்தாளர்களைக் கவுரவிக்கும் கில்லெர் பரிசுத் தெரிவுக் குழுவில் நடுவராக பணியாற்றியவர்.
“அவரிடம் இரண்டு நல்ல புத்தகங்களில் ஒன்றை மட்டும் எப்படித் தெரிவு செய்வார் என்று கேட்டபோது நுட்பமான ஒரு விசயத்தைச் சொன்னார். 'திரும்பத் திரும்பப் படிக்கும் போது ஒன்றிலே ஒளி கூடும். இன்னொன்றிலோ குறையும். ஒளி கூடியதையே நான் தெரிவு செய்கிறேன்' என்றார்.”
மிக நல்ல இந்த புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். பரிந்துரைக்கிறேன்.

No comments: